சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (பிப். 25) இரண்டாம் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள், சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவு, உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் துணை தலைவர்கள் நியமிக்கும் சட்ட முன்வடிவை, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி பேரவைக்கு அறிமுகம் செய்தார். இதில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கீழ் மத வாரியான சிறுபான்மையினரின் சமுதாயத்திலிருந்து எட்டு நபர்களும், மொழி வாரியாக சிறுபான்மையினரின் சமூகத்தில் இருந்து ஐந்து நபர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பிலிருந்து ஒரு உறுப்பினரையும் மதவாரியான சிறுபான்மையினர் அமைப்பிலிருந்து ஒரு உறுப்பினரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் இருவரையும் துணைத் தலைவர்களாக நியமிக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் இன்று (பிப். 25) தாக்கல் செய்யப்பட்டது.