கடந்த சில நாள்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதியானது.
சந்தோஷ் பாபு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், அவரால் தேர்தல் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. கட்சியின் வேட்பாளருக்கே கரோனா தொற்று ஏற்பட்டதால், நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக அந்தத் தொகுதியில் கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரை முடங்கியுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரிக்க காரணம்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அரசியல் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள், பேரணிகள் என்று சொல்லப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசங்கள் அணியாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் பங்கேற்பது தொற்று பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்
தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் (மார்ச் 21) அனுமதிக்கப்பட்டார்.
முக்கிய நிர்வாகிகளுக்குத் தொற்று
கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள சுதீஷ், தேர்தல் சம்பந்தமான கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இருப்பினும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும்விதமாக அவர் மார்ச் 26ஆம் தேதியிலிருந்து தீவிர பரப்புரையில் ஈடுபடுவார் எனக் கட்சியின் தலைமை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.