தமிழ்நாடு

tamil nadu

இன்று கூடுகிறது 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்

By

Published : Jun 21, 2021, 6:43 AM IST

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரைவையின் முதலாவது கூட்டத்தொடர், கரோனா பரவல் காரணமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது. மரபுப்படி தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 10 மணிக்கு தனது உரையை சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் படிப்பார். அந்த உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு படித்து முடிப்பார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாள்கள் விவாதம் நடத்தலாம் என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு, கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.

திமுகவின் முதல் கூட்டம்

திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பெற்ற பின்பு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிவிப்புகளில் உள்ள வாக்குறுதிகளில் முக்கியமானவை சில அறிவிப்புகளாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்

மாநிலத்தில் இரு மொழிக் கொள்கையை மட்டுமே கடைபிடித்தல், புதிய கல்விக் கொள்கைக்கு மறுப்பு தெரிவித்தல், சேது சமுத்திரத்திட்டத்தை மீண்டும் நிறைவேற்றல், நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு, விவசாயிகளின் நலன், 7 பேர் விடுதலை, மேகேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஆளுநர் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு:

ஏற்கனவே பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தொடர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பழனிவேல் தியாகராஜன் உறுதிபடத் தெரிவித்தார்.

கரோனா முன்னெச்சரிக்கை:

இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், செய்தியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கரோனா ‘நெகடிவ்’ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக கலைவாணர் அரங்கின் 3ஆவது தளம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இதையும் படிங்க:16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா?

ABOUT THE AUTHOR

...view details