குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், காவல்துறை அனுமதியின்றி திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை தடுக்கக் கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, தாங்கள் விருப்பப்படும் இடங்களில் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு உரிமையில்லை என்றும், அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க காவல்துறையினருக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் விளக்கமளித்தனர். மேலும், அனுமதியில்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமைதியான முறையில் போராடிவரும் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதைத் திரும்பப்பெற வேண்டுமென வழக்கறிஞர்கள் வைகை, மோகன், என்.ஜி.ஆர்.பிரசாத், முபீன், ராஜா முகமது உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். திருப்பூர் போராட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.