சென்னை: இந்திய ரயில்வே சார்பாக டிக்கெட் பரிசோதனைகளுக்கு கைகளில் டிக்கெட்களை தொடாமலே பரிசோதிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பயணச்சீட்டுகளை பரிசோதனை செய்பவர்கள், காகிதங்களை வைத்து பயணச்சீட்டுகளை சரிபார்க்கும் முறைக்கு மாற்றாக, டிஜிட்டல் முறையில் பார்கோடு ஸ்கேன் செய்து தொடாமலே, காகிதம் இல்லாமலே பயணச்சீட்டுகளை சரிபார்க்கும் நடைமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக ராஜ்தானி சதாப்தி போன்ற நவீன ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனைகளுக்கு 550 பரிசோதனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 10,000 டிஜிட்டல் பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
தென்னக ரயில்வே கோயம்புத்தூர் சதாப்தி ரயில், சென்னை சென்ட்ரல் மைசூர் சதாப்தி ரயில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு இந்த டிஜிட்டல் டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.