தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாகன விபத்து இழப்பீடுகளை விரைந்து வழங்குக - உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்துக்கான தீர்ப்பாயங்களில் உள்ள 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC displeasure
MHC

By

Published : Mar 19, 2022, 6:40 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்ட ஒரு கோடியே 51 லட்சம் ரூபாயை நீதிமன்ற ஊழியர் கையாடல் செய்த விவகாரத்தை அடுத்து, இதுசம்பந்தமாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், 3 குழுக்களை அமைத்து, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தவிட்டது.

அதன்படி ஆய்வு நடத்தி குழுக்கள் அளித்த அறிக்கைகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் கடந்த ஜனவரி வரை, 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகள் உள்ளதாகவும், கோரப்படாத இழப்பீடுகளின் வட்டி மட்டும் 40 கோடி ரூபாய் வரை சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து, இழப்பீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்கள் விசாரிப்பதற்கு பதில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் போல, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் தனி தீர்ப்பாயங்களை அமைக்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு என மேல் முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பதன் மூலம், உயர் நீதிமன்றம், தனது அரசியல் சாசன விவகாரங்களில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஆலோசனை தெரிவித்தனர்.

விபத்து இழப்பீடுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், உரியவர்களை அடையாளம் கண்டு இந்த தொகைகளை வழங்க வேண்டும் அல்லது அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடும்படி தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டனர்.

மேலும், வாகன விபத்து இழப்பீடுகள் டிபாசிட் செய்வதற்காக தனி வங்கிக் கணக்கை துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:' பெண்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவம் புரட்சிகரமானது' - பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

ABOUT THE AUTHOR

...view details