சென்னை:தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகளைக் குறைக்கவும், தடுக்கவும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் அடிப்படையில் 'ஆப்ரேசன் மின்னல் ரவுடி வேட்டை' என்ற ஆப்ரேசனை தமிழ்நாடு போலீஸார் நடத்தி வருவதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஆப்ரேசன் மூலம் முதல் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகளும் அடுத்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 1,177 ரவுடிகளும் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது வரை மொத்தம் 72 மணி நேரத்தில் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்ற வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்து வந்த 489 பேர் மற்றும் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 216 பேர் உட்பட 705 ரவுடிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.