சென்னை: நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக சென்ற காரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சாலையில் இலங்கை தூதரகம் அமைந்திருப்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேவசகாயம் என்ற காவலர் அந்த காரை மடக்கி நிறுத்தியுள்ளார்.
காரை சோதனை செய்தபோது, காரில் இருந்த இளம்பெண் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டே தனது செருப்பை எடுத்து உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாக அடித்துள்ளார். இதனையடுத்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில் மென் பொறியாளரான 23 வயதான அந்த பெண், போரூரில் தங்கி பணி புரிந்து வருவது தெரியவந்தது.
பெண்ணிடம் அத்துமீறல்
மேலும் நுங்கம்பாக்கம் தனியார் நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது விடுதியில் அறிமுகமான 3 பேர் அப்பெண்ணிடம் நட்பாக பேசியுள்ளனர். அனைவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3 மணியளவில் அந்த இளம்பெண் தங்கியிருக்கும் அறையில் கொண்டு விடுவதாக கூறியதை நம்பி காரில் சென்றுள்ளார்.
அப்போது தான் அந்த பெண்ணிடம் காரில் இருந்த நபர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட அவர் கூச்சலிட்டதாகவும், சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மடக்கி பிடித்ததால் அப்பெண் காப்பாற்றப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
காவல் துறை விசாரணை
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல் துறையினர் வழக்கை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட மூவரிடமும் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும் வேலூரைச் சேர்ந்தவர்கள் எனவும், துரைப்பாக்கத்தில் தங்கி மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:Sexual Harassment: திண்டுக்கல் தனியார் கல்லூரி தாளாளர் மீது மேலும் 3 மாணவிகள் புகார்