திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் மின்சார வாரிய குடியிருப்பில் வசித்துவந்தவர் கமலக்கண்ணன். இவர், எண்ணூர் அனல்மின் நிலையத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கமலக்கண்ணன் தன்னுடன் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் சரண்ராஜ் என்பவருடன் காரில் வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். கார் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் இருவரும் காருக்குள் சிக்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், காரில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். இதில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காவல் துறையினர் கமலக்கண்ணனை மீட்டு போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணனும் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று அதே பகுதியில் மற்றொரு விபத்தும் நடந்தது.
சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வினோத். இவர் தனது நண்பர்கள் கார்த்திக், அபிஷேக் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் ஆவடி அருகே நியூ காலனியில் உள்ள தனது மாமா வீட்டிற்குச் செல்ல புறப்பட்டுள்ளார். இவர்கள் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.