சென்னை:நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஆகஸ்ட்.15) தேசியக்கொடியை ஏற்றினார். அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர், "தமிழ்நாட்டில் மூன்று கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை வீணாக்குவதைத் தவிர்த்து, நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாற்றியுள்ளது. உலகத்தரத்துடன்கூடிய புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கிண்டி கிங் நோய்த்தடுப்பு வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
மாநில அரசால், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல, குடும்ப ஓய்வூதியத் தொகை 8,500 ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மதுரை காந்தி அருங்காட்சியகம் ஆறு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
வஉசியின் 150ஆவது பிறந்தநாள் அரசு சார்பில் எழுச்சியோடும் உணர்ச்சியோடும் கொண்டாடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அரசு அலுவலகர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'நிதிச்சுமையிலும் மக்களை காக்கத் தயங்கவில்லை' - மு.க.ஸ்டாலின்