தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சவுகார்பேட்டை கொலை வழக்கு: ஜீவனாம்சம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறால் உறவினர்களே சுட்டுக்கொலை! - involved in the murder case

சென்னை: சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், ஜீவனாம்சம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக உறவினர்களே கொலை செய்தது அம்பலமானது.

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

By

Published : Nov 13, 2020, 3:58 PM IST

சென்னை சவுக்கார்பேட்டை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வந்த தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோர் நேற்று முன்தினம் (நவம்பர் 11) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தலில்சந்த் மகள் பிங்கி அளித்த புகாரின் பேரில் யானைகவுனி காவல்துறையினர் ஐந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், கொலை வழக்கில் தலில்சந்தின் உறவினர்கள் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, புனே விரைந்த தனிப்படையினர், அங்கு பதுங்கியிருந்த கைலாஷ், விஜய் உத்தம், ரபீந்திரநாத்கர் ஆகிய மூவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக இன்று (நவம்பர் 13) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், "கொலை நடைபெற்ற பிறகு ஐந்து தனிப்படையினர் அமைக்கப்பட்டு சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது காரில் ஒரு கும்பல் வந்து துப்பாக்கியால் கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. கொலையாளிகள் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டோம்.

கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்த போது, யானைகவுனி காவல் நிலையத்தில் கடந்த மாதம் தலில்சந்த் புகார் அளித்திருந்ததும், ஷீத்தலுக்கும் அவரது மனைவி ஜெயமாலாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஜீவனாம்சம் கேட்டு ஜெயமாலா வழக்கு தொடர்ந்திருந்ததும் தெரியவந்தது.

ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

ஜீவனாம்சம் கொடுப்பதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஜெயமாலா உறவினர்கள், கூட்டாளிகள் ஆறு பேர் இணைந்து கொலை செய்தது கண்டுபிடிக்கபட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்ற தனிப்படை காவல்துறையினர், குற்றவாளிகள் வந்த வாகனத்தின் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு பூனே சோலாப்பூரில் பதுங்கியிருந்த ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்தரநாத்கர் ஆகியோரை கைது செய்தனர்.

கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கார் ஆகியவற்றை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரையும் ஐந்து முறை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details