தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை முயற்சி: துரிதமாக செயல்பட்ட மகளிர் போலீசாரால் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம் - ரவுடி ரோகித்

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்த வந்த ரவுடியை வெட்ட முயன்ற 5 பேரில் மூவரை துரிதமாக செயல்பட்டு, பெண் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 5, 2022, 10:26 PM IST

சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ரவுடியை மூன்று பேர் கொண்ட கும்பல் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து, வெட்ட முயன்றபோது அங்கிருந்த பெண் நீதிமன்ற காவலர்கள் துரிதமாக செயல்பட்டு, அவரை மீட்டனர். அத்துடன் ஐந்து பேரில் மூவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா(எ)மதுரை பாலா(33). ஏ+ கேட்டகரி ரவுடியான பாலா மீது கொலை, ஆட்கடத்தல், உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படைத் தலைவனான பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு, கூலிப்படையை ஏவி கொலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவக்குமாரை கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரவுடி மதுரை பாலாவை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட கைதி மதுரை பாலா

இந்த நிலையில் மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்குத்தொடர்பாக இன்று (செப்.5) மாலை 3 மணியளவில் கைதி மதுரை பாலா போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் ஆஜர்படுத்திவிட்டு சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்திற்குள் மதுரை பாலாவை அழைத்து வரும்போது, திடீரென ஒரு கும்பல் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை அடித்து அரிவாளால் வெட்ட முயன்றனர்.

இதனைக்கண்டதும் உடனே அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர் ஒருவர், ஒரு நபரை துப்பாக்கியால் தலையில் அடித்து பிடித்தார். பின்னர், தப்பித்து ஓட முயன்ற மற்ற நபர்களை நீதிமன்ற காவலர்களான ராஜலட்சுமி, கிருஷ்ணவேணி, சசிகலா ஆகியோர் துரத்திச்சென்று இருவரை கைது செய்தனர். மேலும் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.இதனையடுத்து பிடிபட்ட மூன்று பேரையும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெட்ட வந்த நபர்கள் செனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல்(24), அருண்(23), அப்துல்(23) என்பது தெரியவந்தது. குறிப்பாக அமைந்தகரைப் பகுதியில் பிரபல ரவுடிகளான அப்பாஸ், ரோகித் ஆகியோரிடையே மாமூல் வசூலிப்பதில் தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை முயற்சி - தடுத்த பெண் நீதிமன்ற காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்

இதனையடுத்து, ரவுடி ரோகித்துக்கு ஆதரவாக மதுரை பாலா செயல்பட்டு வருவதால், ரோகித்தின் கை ஓங்கி இருப்பதால், மதுரை பாலாவை அப்பாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி, இன்று மாலை மதுரை பாலா நீதிமன்ற வளாகத்தில் வரும்போது கொலை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அப்பாஸ் உட்பட இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண் - சிசிடிவி காட்சி உதவியுடன் போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details