உலகில் அனைத்து நடவடிக்கைகளையும் மாற்றிய கரோனா, மாணவர்களின் வேலைவாய்ப்பு தேர்வு முறையையும் மாற்றியுள்ளது.
பொறியியல் இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமாக ஆண்டுதோறும் வளாக வேலைவாய்ப்பு முகாம் (Campus Interview) அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டுவருகிறது. இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள் மாணவர்களை நேரில் அழைத்து தேர்வுசெய்வர்.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கத்தால் இந்தாண்டு வேலைவாய்ப்பு முகாம் எவ்வாறு நடைபெறும் எனத் தெரியாமல் இறுதி ஆண்டு மாணவர்கள் குழப்பத்திலேயே இருந்தனர். கரோனா தீநுண்மி தாக்குதலை தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகமே முறியடித்துவருகிறது.
அதன்படி அண்ணா பல்கலைக்கழகமும் கரோனா தீநுண்மி தாக்குதல் காரணமாக வேலைவாய்ப்பு முகாமை ஆன்லைன் மூலம் நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குநர் இனியன் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
மாணவர்களை வேலைக்குத் தேர்வுசெய்வதற்காக 500 நிறுவனங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்புவிடுத்துள்ளது. செப்டம்பர் மாதம் அவற்றில் 25 நிறுவனங்கள் மாணவர்களை வேலைக்குத் தேர்வுசெய்ய வருகை தர உள்ளன. அதனைத்தொடர்ந்து 45 நிறுவனங்கள் வர உள்ளன.
கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் வேலைவாய்ப்பு முகாமிற்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அனைத்தும் நேரடியாகவே நடைபெற்றது. கரோனா தீநுண்மி தாக்கத்தால் இந்தாண்டு வேலைக்குத் தேர்வுசெய்யும் முறை முற்றிலும் மாறுபட்டு உள்ளது. எழுத்துத்தேர்வு, குழு கலந்துரையாடல் உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குநர் இனியன் பேட்டி கரோனா தீநுண்மி பாதிப்பால் வேலைக்குத் தேர்வுசெய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறையவில்லை. தேர்வுசெய்யும் நடைமுறையில் மட்டுமே மாற்றம் செய்துள்ளோம். மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஆன்லைன் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தாண்டு மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இருக்கிறது. தற்போது அதிகளவில் ஆன்லைன் மூலம் பணிகள் நடைபெற்றுவருவதால் அதற்குரிய மென்பொருள் தயாரிப்பது போன்றவற்றிற்காக அந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எஸ். கெளரி நியமனம்!