சென்னை விமானநிலையத்தில் திருநாவுக்கரசர் எம்பி நேற்று (ஜூன்24) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய, மற்றும் மாநிலத்தில் ஆளும் கட்சி எப்படி முக்கியமோ அதுபோல் பிரதான எதிர்க்கட்சி வலுவாக இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது. அதிமுகவில் யார் இருக்க வேண்டும் என்பதை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால், ஒரு கட்சி பலமாக, வலுவாக நடப்பதற்கு ஒற்றை தலைமையில் செயல்படுவதுதான் சிறப்பு.
இந்தியாவில் தேசிய, மாநில என்று எந்த கட்சியாக இருந்தாலும் ஒருவர்தான் தலைவராக இருப்பர். இரட்டை தலைமை எந்த கட்சியிலும் நடைமுறை கிடையாது. அதிமுக எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா காலத்தில் ஆட்சியில் இருந்த கட்சி. தற்போது பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஒருவரின் தலைமையில் கட்சி இயங்குவது ஜனநாயக ரீதியாக அந்த கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது.
சட்ட ரீதியான பிரச்சனைகளில் இரண்டு பேரும் ஒற்றுமையாக இல்லாதபோது, அடுத்த கட்டமாக சந்திக்க தான் செய்வார்கள். இதில் யார் பக்கம் நியாயம் உள்ளதோ, அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும். சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்ளப் போவதாக இருவரும் சொல்லவில்லை. சசிகலாவிடம் கட்சியும் இல்லை. சசிகலா உள்ளே வந்து கட்சியை கைப்பற்றுவது என்பது சாத்தியமில்லை.