சென்னை: அரக்கோணம் கொலை சம்பவம் தொடர்பாக அன்புமணி வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.
அரக்கோணம் கொலை சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட அன்புமணி, இந்தக் கொலை சம்பவம் குடி போதையில் நடந்தது. சாதிய மோதல் காரணமில்லை. திருமாவளவன் போன்றவர்கள் பொய் தகவலை பரப்புகின்றனர். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை என அதில் கூறியிருந்தார்.
இதற்கு எதிராக படித்த இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில், ‘நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்' என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டனர். இந்நிலையில், அன்புமணிக்கு பதிலடி கொடுக்கு விதமாக, படித்தவர்கள்_படிக்காதவர்கள் என மக்களைப் பாகுபடுத்தி #உயர்வு_தாழ்வு காண்பது சனாதனப் புத்தியின் விளைச்சலாகும். படிக்காதவர்கள் என்னும் சொல்லாடல் ஆணவத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் கல்விபெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பை இழந்தவர்கள். அதனால் அவர்கள் இழிவானவர்கள் அல்ல என திருமா ட்வீட் செய்துள்ளார்.
மேலும் தனக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்' என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் #நெஞ்சம்_நிறைந்த_நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.