விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
"சாதி மறுப்புக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் நிலையில், சில சாதி அரசியல் கட்சியினர் எனக்கு எதிராக வன்முறையை தொடர்ந்து தூண்டி விடுகின்றனர். இதனால் எனது உயிருக்கு 24 மணிநேரமும் பாதிப்பு உள்ளது.கடந்த 2013 ம் ஆண்டு டிஜிபி-யிடம் எனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்தேன். மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், 2015ல் பட்டுக்கோட்டை, வடசேரியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் என் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய திட்டமிடப்பட்டது. அதனால் மீண்டும் பாதுகாப்பு கேட்டு கடந்த பிப்ரவரியில் டிஜிபி-யிடம் மனு அளித்தேன். அதன் பிறகும் எனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் இடம் பெற்றுள்ள கூட்டணியில் உள்ள கட்சிகளின்வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பரப்புரை செய்து வருவதால், சமூக விரோதிகளால் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது. அதனால் எனக்கு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவல்துறை பாதுகாப்பு வழங்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.