சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரா.ஜவகர் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அஞ்சலிக் கடிதத்தில்:
"மார்க்சிய சிந்தனையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான இரா.ஜவகர், கரோனா கொடுந்தொற்றுக்கு பலியானார் என்னும் தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணா வேதனையளிக்கிறது.
அவரது எழுத்துகள் கடைகோடி மனிதர்களுக்கும் எளிதாகப் புரியும் வகையில் மார்க்சிய மெய்யியலைக் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன. ஒரு ஆற்றல் வாய்ந்த மார்க்சிய படைப்பாளரைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. அவரது மறைவு, தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, இடதுசாரி முற்போக்கு சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
விசிக திங்களிதழான 'தமிழ்மண்' இதழில் நான் எழுதிவந்த 'அமைப்பாய்த் திரள்வோம்' தொடரினை மாதந்தோறும் தவறாமல் படித்துவிட்டு மனமாரப் பாராட்டி என்னை ஊக்கப்படுத்துவார்.
தொடர்ந்து, 58 கட்டுரைகள் எழுதிய நிலையில், தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பணிச்சுமைகளாலும் தீராத பிடரி வலியாலும் 'அமைப்பாய்த் திரள்வோம்' தொடரினை இடையில் நிறுத்திவிட்டேன். அப்போது, "இடைநிறுத்தம் கூடாது; தொடர்ந்து எழுதுங்கள்" என்று என்னைத் தட்டிக்கொடுத்துப் பேரூக்கமளித்தார்.
அத்துடன், எழுதி முடித்த கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து அதனை ஒரு நூலாக்கி வெளியிடவைத்த அரும்பெரும்பணியையும் ஆற்றியவர் அவர்.