தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கள்ளக்குறிச்சி விவகாரம்;தொடர்பில்லாத பலரின் கைதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் எம்.பி. - ஸ்ரீமதி விவகாரம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் தொடர்பில்லாத பலர் கைதாகியதைக் கண்டித்து வரும் ஆக.13ஆம் தேதி விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2022, 8:54 PM IST

சென்னை மாலை முரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆவது பிறந்தநாள் விழாவில் இன்று (ஆக.11) அஞ்சலி செலுத்திய பிறகு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ''சேது சமுத்திரம் கால்வாய்க்கு 'தமிழன் கால்வாய்' என்று பெயர் சூட்டி அதை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர் சி.பா. ஆதித்தனார். அவர் ஆற்றியத்தொண்டு அவரது வாரிசுகளான ராமச்சந்திர ஆதித்தனாரும் ஏற்றுசெயல்படுத்தினார். பிகாரில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் வரவேற்கத்தக்கது. நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவின் முடிவை, விசிக வரவேற்கிறது.

சனாதன சக்திகளை முறியடிக்கும் ஒரு பெரிய முயற்சியை அனைத்து ஜனநாயக சக்திகளும் மேற்கொள்ள வேண்டும் என்று விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் நிதிஷ் குமாரின் குரலை எதிரொலிக்கும் வகையில் செயல்பட வேண்டும். 'சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்; ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்' என்ற நோக்கத்தில் செயலாற்றவேண்டும்.

தொடர்பில்லாதவர்களின் கைது-விசிக ஆர்ப்பாட்டம்:அதோடு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையில் அந்த வன்முறைக்குத் தொடர்பில்லாத பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் இதைக் கண்டித்து ஆக.13ஆம் தேதி விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

5G அலைக்கற்றை;கண்டுகொள்ளாத ஊடகம்?5G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், ஊடகங்கள், இதைப்பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

இப்பொழுது அண்ணா ஹசாரே போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் 'ஊழலை ஒழிப்போம்' என்று புறப்பட்ட ஜனநாயக சக்திகள் தற்போது வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன் என்று புரியவில்லை’ என்றார்.

தேசியக்கொடி ஏற்றுவதிலும் சாதியப்பாகுபாடு: கள்ளக்குறிச்சியில் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் தேசியக்கொடி ஏற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ’இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். அந்தப் பெண்ணுக்கு தகுந்த பாதுகாப்பை காவல்துறை அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

செய்தியாளர் சந்திப்பு முடித்தபிறகு செல்லும் வழியில் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் எல்எல்ஏவை சந்தித்துப் பேசினார், திருமாவளவன். அப்போது கொடி ஏற்றும் விஷயத்தில் அரசியல் வேண்டாம்; அனைவர் வீட்டிலும் கொடி ஏற்றச் சொல்லுங்கள் என வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: பட்டியலின ஊராட்சித்தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றமுடியாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதவும்!

ABOUT THE AUTHOR

...view details