தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும்: திருமாவளவன் - admk

சென்னை: மத்திய அரசின் தலையீடுகளை அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும் என சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்

By

Published : Jun 17, 2019, 1:52 PM IST

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் பதவியேற்பு உறுதிமொழி, அதன்பின் சபாநாயகர் தேர்வு நடக்கிறது. இரு அவையில் குடியரசுத் தலைவர் பேசுவார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இரண்டு பேர் வென்றுள்ளோம்.

தொகுதிகளின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் பாதுகாப்புக்கும் நாடாளுமன்றத்தில் எங்களால் இயன்ற அளவில் அழுத்தமாக குரல் கொடுப்போம்.

அனைத்து தரப்பு விளிம்பு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதுதான் பெரும் சவாலாக உள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடு பாலைவனம் ஆகும் நிலையை ஏற்படுத்தும் வகையில் காவிரி உள்பட ஆற்றுநீர் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க குரல் கொடுப்போம்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வலியுறுத்துவோம். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி கொள்கையை காவி மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருதத்தை விரும்புகின்ற சனாதன கலாசார திணிப்பு முயற்சிகளை முறியடிக்கின்ற வகையில் குரல் கொடுப்போம். கூடங்குளம் அணுக் கழிவுகளை அதன் வளாகத்திலேயே அமைக்கின்ற முயற்சி அதிர்ச்சியை தருகிறது. கூடுதலாக அணு உலைகளை திறக்கக் கூடாது. இயங்குகின்ற அணு உலைகளை மூட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

பிரதமரை சந்தித்த முதலமைச்சர் தமிழ்நாடு பிரச்னைகள் குறித்து மனு தந்ததாக கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி பிரச்னைகள் பற்றிதான் பிரதமரிடம் பேசியதாகவும் தமிழ்நாடு பிரச்னைகள் பற்றி பேசியதாகவும் தெரியவில்லை. அது கண்துடைப்பு என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் தலையீடு இருப்பதால்தான் அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை வெடித்துள்ளது. இரட்டை தலைமை என்பதை டெல்லியின் தலைமை, தமிழ்நாடு தலைமை என புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. அதிமுகவில் மோடியும் தலைமை தாங்குகிறார் என்பதை மறைமுகமாக சொல்லுகிற செய்தி என நம்புகிறேன். மத்திய அரசின் தலையீடுகளை அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும்” என்றார்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற எம்.பி.க்கள் சொத்துக்களை விற்று வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி கேட்டதற்கு பதிலளித்த அவர், ‘தமிழ்நாட்டில் காலூன்ற முடியாததால் பாஜக மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடாகத்தான் பொன்.ராதாகிருஷ்ணன் இது போன்ற கருத்துகளை சொல்கிறார்’ என பதிலளித்தார்.

இதனிடையே, பொன். ராதாகிருஷ்ணன், தனது அனைத்து சொத்துகளையும் விற்று விவசாயிகளின் கடனை தீர்க்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details