தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சரை சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா? - தணிகாசலத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி

கரோனா தொற்றைத் தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அது தமிழ்நாடு அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக தணிகாசலம் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

Thiru thanikachalam challenging Goondas, notice order, MHC
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 23, 2020, 3:26 PM IST

Updated : Jul 23, 2020, 4:13 PM IST

சென்னை: அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பில் இருக்கக்கூடிய முதலமைச்சரைப் பற்றி அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா என குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட தணிகாசலத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, தணிகாசலம் சித்த மருத்துவர் அல்ல என்றும், அவர் விசாரணைக்கு அளித்துள்ள சான்றுகள் போலியானவை எனவும் காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், சித்த மருத்துவத்தின் மீது அரசு வெறுப்பு காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், சித்த மருத்துவச் சிகிச்சை தொடர்பாகப் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசும், மத்திய ஆயுஷ் அமைச்சகமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இச்சூழலில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவை நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெறாததால், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அப்போது தணிகாசலம் தரப்பில், தணிகாசலம் சித்த மருத்துவ முறையாகப் படிக்கவில்லை என்றாலும், பரம்பரை வைத்திய முறை மற்றும் பணியாற்றிய அனுபவம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரோனாவுக்கு எதிராக சித்த மருந்தைத் தணிகாசலம் கண்டிபிடித்திருப்பதாகவும், அதன் மூலப்பொருள்கள் குறித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பிப்ரவரி மாதம் அனுப்பிய கடிதம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனால் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சித்த மருத்துவத்தில் கரானாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறுவதை வரவேற்பதாகவும், சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை வைத்துக் கொண்டு உரிய அங்கீகாராமோ, தகுதியோ பெறாத நிலையில் தணிகாசலத்தை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

மேலும் அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா எனவும் கேள்வி எழுப்பினர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனுவில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதன் பின்னர், தணிகாசலம் கண்டுபிடித்தாகக் கூறும் கரோனா தடுப்பு மருத்து குறித்த விண்ணப்பத்தில் எடுத்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Last Updated : Jul 23, 2020, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details