தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் மூன்றாவது அணி என்பது என்றுமே முகிழ்க்காத அணியாகவே இருந்துள்ளது. 1996 இல் வைகோ, 2006 இல் விஜயகாந்த், 2016 இல் மக்கள் நல கூட்டணி என பயங்கர எதிர்பார்ப்புகளோடு தேர்தல் களம் கண்டாலும், தமிழ்நாட்டு அரசியலில் மூன்றாவது அணி என்பது எடுபடாத அரசியலாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. இந்நிலையில்தான், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணியாக உருவெடுத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன்.
பல வாரங்களுக்கு முன்பே மாநிலம் முழுவதும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ள கமல் ஹாசன், தற்போது திமுக, அதிமுகவிற்கு மாற்றாக கூட்டணி சேர்க்கும் வேலையில் மும்முரமாகியுள்ளார். அதன்படி, அவரோடு முதலில் கூட்டணி பேசிய ஆம் ஆத்மி கட்சி, தமிழக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமாரின் சமகவும், பாரிவேந்தரின் ஐஜேகேவும் கமலுடன் இணைந்துள்ளன. அதோடு, நேற்று மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன், இன்னும் மூன்று நாட்கள் தருகிறேன், வருபவர்கள் வந்து விடுங்கள் என்று கட்சிகளுக்கு சூசக அழைப்பும் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டை பொருத்தளவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையே மக்கள் மாறி மாறி ஆட்சியில் அமரவைக்கின்றனர். இரண்டிற்கும் மாற்றாக நாங்கள் இருக்கிறோம் என வந்தவர்கள், ஒன்று பிற்காலங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டு வைக்கின்றனர் அல்லது தனியாகவே நின்று விடுகின்றனர். 90களில் இருந்தே இதனை நாம் பார்க்க முடியும். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வைகோ தலைமையிலான மக்கள் ஜனநாயக முன்னணி, மூன்றாவது அணியாக போட்டியிட்டு, அதில் மதிமுக மட்டும் 5.8% வாக்குகளைப் பெற்றது. அடுத்து, விஜயகாந்தின் தேமுதிக 2006 இல் நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 10% வாக்குகளை பெற்று, அடுத்து நடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. 2016 இல் நடந்த தேர்தலில் தேமுதிக, இடதுசாரிகள், விசிக, மதிமுக இணைந்து அமைத்த மக்கள் நலக் கூட்டணியால் 6.1% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
ஆக, தமிழ்நாட்டு தேர்தல்களில் மூன்றாவது அணியாக களம் காணும் கட்சிகளின் வாக்கு வீதம் இதுவரை 10%-ஐ கடக்க முடிந்ததில்லை. மூன்றாவது அணி வெற்றி பெற்றதாக வரலாறும் இல்லை. இந்நிலையில், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு 3.7% வாக்குகளை பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மக்கள் நீதி மய்யம் அமைத்துள்ள மூன்றாவது அணியால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் என்ன நிகழப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.