டெல்லியில் நடந்த நிர்பயா குற்ற சம்பவத்திற்கு பிறகு பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு நிர்பயா திட்டம் என்றே பெயரிட்ட மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கியும் வருகிறது. சென்னையில் காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பில் இருந்த நேரத்தில், ’மூன்றாம் கண்’ என்ற திட்டத்தை உருவாக்கி, 10 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு பொதுமக்கள் தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் வணிகர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் என பலரது பங்களிப்புடன் மாநகரம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் 2.70 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில், தெற்காசிய இதழ் நடத்திய ஆய்வில், உலகளவில் 1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நகரப் பட்டியலில், சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி, சென்னையில் சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்களும், அடுத்த இடத்தில் 480 சிசிடிவிக்களுடன் ஹைதராபாத்தும், சீனாவின் ஹர்பின் நகரம் 411 கேமராக்கள் பொருத்தி மூன்றாம் இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, குற்றங்களை தடுக்கும் என பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களால், உண்மையிலேயே குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால், இல்லை என்கிறது புள்ளி விவரம். இந்த ஆண்டுகளில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நாடு முழுவதும் 7.3% பெருகியுள்ளதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே போல் தமிழகத்திலும் கொலை மற்றும் வழிப்பறி குற்றங்களின் எண்ணிக்கை 11% அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் 2.70 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு மட்டும் நடந்த கொலைக் குற்றங்கள் 172. இது 2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சமஅளவிலேயே உள்ளது. இது சிசிடிவியின் பயன்பாட்டையே கேள்விக்குள்ளாக்குவதாக பலரும் கருதுகின்றனர்.