தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திலீபனின் பசி இன்னும் தீரவில்லை... - திலீபன் நினைவு நாள்

அகிம்சை தேசம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தேசத்திற்கு எதிராக ஒருவரால் அகிம்சை வழியில் போராடி வெற்றி பெற முடியவில்லை என்றால் அன்று திலீபன் மட்டுமா இறந்தார்?....

Thileepan memorial day

By

Published : Sep 26, 2019, 7:46 PM IST

ஈழப்போரட்டம் அரை நூற்றாண்டுக்கும் மேலான விடுதலைப் போராட்டம். இதன் போராட்ட வடிவங்கள் இன்று மாறியிருக்கிறதே ஒழிய ஈழ மக்களின் லட்சிய உறுதி இன்னும் குறையவில்லை. ஈழ போராட்டத்தின் ஆரம்பக்கட்டம் ஈழத்து காந்தி தந்தை செல்வா தலைமையில் அகிம்சை வழியில்தான் இருந்தது.

ஆனால் அது தோல்வியடைந்த பிறகு ஆயதப் போராட்டத்தின் மூலம் விடுதலையைப் பெறமுடியும் என்று எண்ணி ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழ் இளைஞர்கள் பெரும்பாலனோர் இணைந்தனர். அதில் மருத்துவக் கல்லூரி மாணவரான பார்த்திபன் என்கிற திலீபனும் ஒருவர்.

சிறுவயதிலேயே தாயை இழந்த திலீபன், தன் தாய் நிலத்தையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக அதற்கான போராட்டத்தில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக்கொண்டு சிங்கள அரசிற்கு எதிராக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

திலீபன்

இந்த சமயத்தில் ஈழ விவகாரத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ இந்தியா தனது ராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பிவைத்தது. அதன் பிறகு இந்த விவகாரத்தில் இந்தியா நேரடியாக பங்கெடுக்க, இந்தியா இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை (முக்கியமாக இந்தியாவை) மதித்து விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் இந்திய அமைதிப்படையோ அதன் மேற்பார்வையில் இயங்கிய, ஊர்க்காவல் படைக்கு ஆயுதங்களை வழங்கி தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, இலங்கையில் அமைதியை நிலைநாட்ட சென்ற இந்திய அமைதிப்படை சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான செயல்களில் இறங்கியது. இதனால் மனம் வருந்திய திலீபன், அகிம்சையை உலகுக்கு போதித்த காந்தியின் தேசத்திடமிருந்து காந்தியின் வழியிலேயே நீதியை பெற எண்ணினார். அதன்படி,

  • மீள் குடியமர்த்தல் என்ற பெயரில் தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றத்தை தடுக்கவேண்டும்.
  • சிறைச்சாலையில்,ராணுவ தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
  • அவசர கால சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்
  • இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் இயங்கும் ஊர் காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற வேண்டும்
  • தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்கள் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்
    திலீபன்

என்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லூர் முருகன் கோயில் முன்பு உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இந்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும்வரை ஒரு சொட்டு நீர் அருந்தமாட்டேன் என்று தீர்க்கமாக தெரிவித்தார் அந்த 23 வயது இளைஞர்.

சாவை அழைக்கிறானே இந்த இளைஞன் என்று தமிழ் மக்கள் எண்ணி திலீபனை காண உண்ணாவிரத மேடையின் முன்புறம் குவியத்தொடங்கினர். மேடையிலேயே பள்ளி மாணவிகள் திலீபன் போராட்டம் பற்றிய தங்கள் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தனர். முக்கியத் தலைவர்கள் திலீபனின் கோரிக்கைகளை மக்கள் முன் விளக்கி கொண்டிருந்தனர். மூன்றாம் நாள் திலீபனின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது.

இதனைக் கண்ட ஒருவர், திலீபன் தண்ணீர் அருந்திவிட்டு போராட்டத்தை தொடர வேண்டும் என்று தன் கருத்தை மேடையில் கூறினர். அப்போது பேசிய திலீபன், ”நான் லட்சத்தியத்திற்கு உயிரை துச்சமென மதித்து இந்த ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

மக்களிடம் பேசிய திலீபன்

என் நிலைகண்டு சிலர் நீர் அருந்தச் சொல்கிறார்கள். இது என் லட்சியத்தையும், எமது போராட்டத்தையும் அவமானப்படுத்துவதாக உணர்கிறேன்”. இவ்வாறு அவர் பேசிய வார்த்தைகளில், ஒரு போராட்ட மனம் எவ்வளவு உறுதியாக இருக்கும் என்பதை உலகம் உணர்ந்தது.

திலீபனின் பேச்சைக்கேட்ட மக்கள் இத்தனை உறுதியோடு இருக்கும் இவன் எத்தனை நாளைக்கு தன்னுடலை வருத்தப்போகிறானோ என்று எண்ணி மனம் வெம்பினர்.போராட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்த இந்திய அரசு, புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்தியத் தூதர் மூலம் மேற்கொண்ட இரண்டு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மரணத்தை நெருங்கி கொண்டிருந்த திலீபன் மக்கள் முன் பேச விரும்பினார்.

தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஓர் சமதர்ம சோசலிச தமிழீழமாகத்தான் மலரும். அதுவரை ஒருபோதும் எம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை - திலீபன்.

எழுந்து நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே தன்னிடம் மிஞ்சி இருந்த சக்தியை திரட்டி, " இதற்கு முன் பலரும் தமிழீழ விடுதலைக்காக தங்கள் உயிரை ஈகம் செய்துள்ளனர். முதல் கரும்புலி மில்லருடன் கடைசிவரை இருந்தேன். நம்முடைய மக்கள் விடுதலையை வென்றெடுப்பார்கள் என்று அவன் கூறினான். ஆனால் அதைக் காண்பதற்கோ நான் இருக்கமாட்டேன் என்பதுதான் ஒரு ஏக்கம் என்று கூறி அவன் தன் சாவை எதிர்கொண்டான். அதுபோலவே நான் இறப்பதும் நிச்சயம். அப்படி நான் இறந்ததும் வானத்தில் இருந்து என் தோழர்களுடன் நம் லட்சியத்திற்காக போராடுவேன்” என்று அவர் பேசி முடித்தபோது தமிழ் கலங்கியிருந்தது. அதுமட்டுமின்றி உண்ணாவிரதத்தை கைவிடலாமே என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கோரிக்கை வைக்க அதையும் மறுத்தார் திலீபன்.

உண்ணாவிரத மேடையில் திலீபனை சந்தித்த பிரபாகரன்

ஆயுத போரட்டம் மக்கள் மத்தியில் பரவியதைவிட திலீபனின் அகிம்சை போராட்டம் மக்களிடையே வீரியமாகப் பரவியது. திலீபனைப் போல் பலரும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர். தன் கண்முன்னே ஒரு உயிர் பிரிவது எவ்வளவு பெரிய வலி. அந்த வலியுடன் அத்தனை மக்களும் உண்ணாவிரதே முடையின் முன்பு அமர்ந்திருந்தனர். காந்தியின் தேசத்திலிருந்து நீதியைக் கோரி காந்தி வழியிலான அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்த தீலிபன், தன் உயிருக்கும் மேலாக நேசித்த மண்ணிலேயே செப்டம்பர் 26ஆம் தேதி மடிந்தார்.

தீலிபன் இறந்து 32 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவர் பசியோடுதான் இருக்கிறார். தமிழீழ மக்களும் தங்கள் தமிழீழத் தாகத்துடன்தான் இருக்கிறார்கள்.

அகிம்சை தேசம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தேசத்திற்கு எதிராக ஒருவரால் அகிம்சை வழியில் போராடி வெற்றி பெற முடியவில்லை என்றால் அன்று திலீபன் மட்டுமா இறந்தார்?.... அதனை மனிதர்கள் பேசுவதில்லை, நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் வரலாறு தன் நினைவுகளில் அதனை ஆழமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details