சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,
நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதேபோல் நாளை மறுநாள் தென்மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,
அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்த வானிலை ஆய்வு மையம் வரும் டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தற்பொழுது அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கும் நகரக் கூடும்.
இது மேலும் வடமேற்குத் திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கரையை வரும் டிசம்பர் 4ஆம் தேதி காலை நெருங்கக் கூடும்.