கரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்ட இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் எந்த முறையில் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்து உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரெசா மகளிர் பல்கலைக்கழகம் தவிர மீதமுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் முறையில் இறுதிப் பருவத்தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் செப்டம்பர் 21 முதல் இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
சென்னை பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு ஆன்லைன் தேர்வு, 90 நிமிடங்களுக்கு கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்து, அதற்கு விடைகளை ஏ4 தாளில் எழுதி பதிவேற்றம் செய்யும் முறையில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.
இந்தத் தேர்வுகள் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையும், பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையும் நடைபெறும் என்றும், தேர்வுக்கு 30 நிமிடங்கள் முன்பாக பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டது.
ஆனால் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற மாதிரி ஆன்லைன் தேர்வில் கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்வதிலும், விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் சிக்கல் எழுந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் வந்தது.
ஆனால் தற்பொழுது நடைபெற்றுவரும் தேர்வில் எந்தப்புகாரும் ஏற்படவில்லை. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 115 கல்லூரிகளிலிருந்து சுமார் 52 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர்.
மாணவர்கள் 3 இணையதளம் மூலமாக விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க பல்கலைக்கழகத்தின்கீழ் செய்யப்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்களையும் உள்ளடக்கி வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.