சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் நடந்துள்ள முறைகேட்டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு பங்கு இருப்பதாக குற்றஞ்சாட்டி, அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ் மற்றும் திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக நடைபெற்றுவருகிறது.
கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அறப்போர் இயக்கம், திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரிய நிலையில் அது குறித்து பதிலளிக்க அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று (நவம்பர் 9) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “உச்ச நீதிமன்றத்தில் லலிதாகுமாரி வழக்கின் தீர்ப்பின்படி, ஆரம்பக்கட்ட விசாரணையில் முகாந்திரம் உள்ளதா? இல்லையா? என்பதை மட்டும் தெரிவித்தால் போதுமானது. விசாரணை அறிக்கையை புகார்தாரர்களுக்கு தர வேண்டுமென்ற அவசியமில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லாததால் விசாரணையை கைவிட அரசு முடிவு செய்துள்ளது” என வாதிட்டார். அத்துடன், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அது குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியமில்லை! அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அறப்போர் இயக்கம் சார்பில் பதில் மனு செய்வதற்காக விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.
இதையும் படிங்க :திருப்பூரில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்