சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது 'சி.வி. ராமன் சைன்ஸ் பார்க்' கட்டடம். இங்கு, மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதற்காக சுமார் 41 புரஜெக்டர்கள் வாங்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்டுவந்தது.
இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்தக் கட்டடத்தை, கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றி, சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்னர், அக்டோபர் மாதம் மீண்டும் இந்தக் கட்டடத்தை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாநகராட்சியினர் ஒப்படைத்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி, இக்கட்டடத்தைச் சுத்தம் செய்வதற்காக, கட்டடப் பொறியாளர் முத்துக்குமார் சென்றுள்ளார். அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்படாமல், லாக் மட்டும் உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, அங்கு வகுப்பு நடத்துவதற்காக வைத்திருந்த சுமார் 41 புரஜெக்டர்கள் காணாமல்போயிருப்பதை அறிந்தார். உடனடியாக இது குறித்து பல்கலை நிர்வாகத்திடம் தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குணசேகரன், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் முதியவர்களை அதிகம் தாக்கும் கரோனா!