சென்னை பாடி இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால் ராபர்ட் (35). இவர் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் நேற்று தனது குடும்பத்துடன் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள பிகே.என் ஆடிட்டோரியம் திருமண மண்டபத்தில் தனது உறவினரின் நிச்சயத்திற்கு வந்துள்ளார்.
அப்போது தனது மனைவி கோமதி இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு தனது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் இருக்கையில் பார்க்கும் போது கைப்பை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் கைப்பையில் ஒரு சவரன் தங்க நாணயம், ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவை இருந்துள்ளது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பால் ராபர்ட் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது யாரோ அடையாளம் தெரியாத நபர் கைப்பையை திருடிச் செல்வது தெரியவந்தது. அவரை காவலர்கள் தற்போது தேடிவருகின்றனர்.