சென்னை:கரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. ஓடிடி தளங்களால் வீடுகளில் முடங்கிக் கிடந்த ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளை நாடிச்செல்ல தொடங்கியுள்ளனர்.
தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 300 புதிய திரைப்படங்களை, திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டிவருகின்றன. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே திரையரங்கை நாடிவருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விரும்பிய திரைப்படங்களை விரும்பிய நேரத்தில் பார்க்கும் வசதி ஓடிடி தளங்களில் இருப்பது ஒருபுறமிருந்தாலும், திரையரங்குக்குச் சென்று ஒரு திரைப்படத்தைப் பார்த்தால்தான் ரசனை தன்மை நிறைவுறும் என்று நினைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தமிழ் சினிமா உலகம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் மாத இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டு தற்போதுவரை, கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தலைவி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது.