மே 21, 1991 :சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரைக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி உள்பட 15 பேர் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
மே 20, 1992 : சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜனவரி 28, 1998 : இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது பூந்தமல்லி (டிஏடிஏ)சிறப்பு நீதிமன்றம்.
மே 11, 1999 :நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 19 பேர் தண்டனைக் காலத்தை முடித்ததாகக் கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
ஏப்ரல் 21, 2000: நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரை செய்ததை ஆளுநர் ஏற்றார்.
ஏப்ரல் 28, 2000: தூக்குத் தண்டனைக்கு எதிரான மூன்று பேரின் கருணை மனுவை தமிழ்நாடு அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது.
ஆகஸ்ட் 12, 2011: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யபப்பட்டதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார்.
ஆகஸ்ட் 26, 2011 : மூன்று பேரின் தூக்குத் தண்டனைக்கான ஏற்பாட்டை சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கு 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முடி செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 30, 2011: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மரண தண்டனையை மாற்ற பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
பிப்ரவரி 18, 2014: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
பிப்ரவரி 19 2014: தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜிவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.
பிப்ரவரி 20, 2014 : தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசு மனுவில், 7 பேர் விடுவிக்கும் ஆணைக்கு தடை விதித்தது.
ஏப்ரல் 1, 2014: தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்தது.
ஏப்ரல் 25, 2014: இந்த வழக்கில் மத்திய - மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
டிசம்பர் 2 2015 :மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால், 161ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
மார்ச் 2 2016 :7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழ்நாடு அரசு.
செப்டம்பர் 6 2018: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.
செப்டம்பர் 9 2018 : ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரைந்தது.
செப்டம்பர் 9 2018 :பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் முதலமைச்சரை சந்தித்து, தன் மகன் உள்பட ஏழு பேரை விடுதை செய்ய பரிந்துரைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
ஜூலை 1, 2019:ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி பரிந்துரைத்ததை ஆளுநருக்கு நினைவூட்ட நினைவூட்டல் கடிதம் அனுப்பவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
ஜனவரி 14, 2020:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டம் தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
ஜனவரி 21, 2020:குற்றவாளிகள் கருணை மனு மீதான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் தெரிவிக்க உத்தரவிட்டது.
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக தொடர்ப்பட்ட வழக்கில் ஆளுநர் இந்த வாரத்தில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் இன்று (பிப். 2) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், எழுவர் விடுதலை குறித்து அறிவிக்கப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் தொடக்க உரை ஆற்றிய ஆளுநர் உரையில் ஏழு பேர் குறித்து எந்தவித அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிங்க....ராஜிவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எழுவர் யார்?