தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் முதலில் நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது. பின்னர், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டதோடு, ஆன்லைன் வாயிலாக மட்டும் மது விற்பனை செய்யலாம் என்று தெரிவித்திருந்தது.
டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் - தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில், நீதிபதிகள் வினித் கோத்தாரி, பி.என் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இந்தத் உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஆன்லைன் மூலமும் மது விற்பனை நடத்த அனுமதிக்கக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மனுக்களும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் வரும் 14 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் தொடர்பான அனைத்தும் வழக்குகளும் இரு நீதிபதிகள் அமர்வில் இருந்து, மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில், நீதிபதிகள் வினித் கோத்தாரி, பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட மூன்று பேர் அடங்கிய அமர்வு, டாஸ்மாக் தொடர்பான அனைத்து வழக்குகளையும், வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.