சென்னை: மத்திய அரசைப் பொறுத்தவரை பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களுக்கு ஒரு நீதி, பாஜக ஆட்சி நடத்தாத மாநிலங்களுக்கு வேறு ஒரு நீதி என்ற முறையைத் தான் பின்பற்றி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2022-2023ஆண்டிற்கான பட்ஜெட் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த மக்களுக்கு இந்த மத்திய நிதி நிலை அறிக்கை ஏமாற்றத்தினை அளித்திருக்கிறது. வரக்கூடிய 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்று சொல்லுவது அவர்கள் எவ்வளவு நடிகர்கள் என்பதைக் காட்டுகிறது.
கரோனாவால் பாதிக்கப்படாத மக்களே கிடையாது. சிறு, குறு தொழில்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. அவர்கள் எதிர்பார்த்த தொகையும் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்த தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேராது.
மாத ஊதியம் பெறுபவர்களுக்கு வரிச்சலுகை கிடையாது
மாதாந்திரம் ஊதியம் பெறுபவர்களுக்கு வரிச்சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் இல்லை. டிஜிட்டல் கரன்சி என்று சொல்கிறார்கள், ஏழை மக்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு மூலமாக எதிர்காலத்தில் மாநிலத்திற்கு கிடைக்கும் வருமானம் பூஜ்ஜியம் ஆக்கப்படும்.
இந்தப் பேரிடர் காலத்தில் அப்பாவி மக்களிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வசூல் செய்ததாக மத்திய அரசு பெருமையாக சொல்கிறது. இரக்கமற்ற முறையில் வசூல் செய்து இருப்பது பெருமிதத்திற்குரியது அல்ல.