சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர் மகேஷ்குமார். இவர் தமிழ்நாடு காங்கிரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு இணைச் செயலாளராகவும் உள்ளார்.
இவரது மனைவியின் தோழி குடும்பத்தினருடன் நட்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வீடு வாங்கப்போவதாக மனைவியின் தோழி, அவரது கணவரான ரூப் சந்தர் என்பவருக்குப் பல தவணைகளில் 40 லட்சம் ரூபாய் வரை மகேஷ்குமார் கடனாகக் கொடுத்துள்ளார்.
கொடுத்த கடனை திரும்ப கேட்க சென்றபோது அடியாள்களை வைத்து ரூப்சந்தர் தன்னை சரமாரியாகத் தாக்கியதாக மகேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மனைவியை மகேஷ்குமாரும் அவரது மனைவியும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் உறவில் ஈடுபட்டதுபோல காணொலிப் பதிவுசெய்து மிரட்டுவதாக ரூப் சந்தர் புகார் அளித்துள்ளார்.
அதேபோல், ராயபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இரு காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரியதர்ஷினி தன்னை தகாத வார்த்தையால் திட்டி ரூப்சந்தருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மகேஷ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் ரூப்சந்தரும் தன்னை மிரட்டுவதாக மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் மகேஷ்குமார் புகார்அளித்துள்ளார்.
அந்தப் புகார் மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு நேற்று மகேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் மகேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில், "ரூப் சந்தரின் மனைவி புகார் அளித்ததாகக் கூறப்படும் நாளில் அவர் கரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
ரூப் சந்தரின் தூண்டுதலின்பேரில் பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் நானும் என் மனைவியும் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளோம்" என்றார்.