சென்னை:தமிழ்நாட்டில் தடுப்பூசி போடத் தகுதியான நபர்களை 6.06 கோடி நபர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி முகாம் வாயிலாகத் தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி...
- மக்கள் தொகை, தடுப்பூசி செலுத்தப்படாத இடங்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள் அதிகம் உள்ள இடங்களைத் தேர்வுசெய்து மாவட்ட வாரியாக சுகாதார அலுவலர்கள் தடுப்பூசி முகாமை அமைத்தல் வேண்டும்.
- சிறப்புத் தடுப்பூசி முகாம் குறித்து விளம்பரப் பதாகைகள் மூலமும், உள்ளாட்சி அமைப்பினர் வாயிலாகவும் பொதுமக்களுக்குத் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்.
- தடுப்பூசி முகாம்களில் அரசுத் துறை அலுவலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோவின் செயலியில் தடுப்பூசி செலுத்துதலைப் பதிவேற்றம் செய்ய அங்கன்வாடி ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும்.
- சுழற்சங்கங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறையினர் வாயிலாகப் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு தாமதமின்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
- சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காவலர்கள் உதவியுடன் பொதுமக்களின் வருகையைக் கண்காணித்து பொதுமக்களை ஒழுங்குப்படுத்தி தடுப்பூசி பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
- மாவட்டம் வாரியாக சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து மாபெரும் தடுப்பூசி முகாம் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டு தடுப்பூசி முகாமை முழுமையாக வெற்றிபெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை தடையின்றி தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை எடுப்பதுடன் சுகாதார ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், கிராமப்புறச் செவிலியர் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு முகாமிற்கு நான்கு ஊழியர்களை நியமித்து தடுப்பூசி முகாமை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 89 ஆயிரத்து 760 நபர்கள் குறித்த காலத்திற்குள் இரண்டாவது தவணை செலுத்தாமல் உள்ள நிலையில் அவர்களுக்கான இரண்டாம் தவணை தடுப்பூசியை உறுதிசெய்திட வேண்டும்.