சென்னை: சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா ஏா்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று (பிப்ரவரி 13) அதிகாலை வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு, ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (41) என்பவரின் கடவுச்சீட்டு, ஆவணங்களைப் பரிசோதித்தனர். அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டட வேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்துவிட்டு வருவது தெரியவந்தது.
ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் யாரும் செல்லக் கூடாது என்று மத்திய அரசு 2014ஆம் ஆண்டுமுதல் தடைவிதித்துள்ளது. அதை மீறிச் செல்லும் இந்தியர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
ஆனால் முருகன் இந்திய அரசின் எச்சரிக்கையை மீறி ஏமன் நாட்டிற்குச் சென்றுவருவதை குடியுரிமை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை வெளியில் விடாமல், தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.