சென்னை திருவான்மியூர் காமராஜர் சாலையில் சாய்தேவி என்ற பெயரில் பாஸ்ட் ஃபுட் கடை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று (ஜூன் 14) வழக்கம்போல் கடையை திறந்து வைத்திருந்தபோது, அந்தப் பகுதியில் சுற்றி திரியக்கூடிய பெண் நாய் ஒன்று கடை அருகே படுத்திருந்தது.
அப்போது, கடையில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர் திடீரென ஆத்திரத்தில் சட்டியில் சூடாக இருந்த எண்ணெயை எடுத்து நாயின் மீது ஊற்றினார். இதில் உடல் முழுவதும் வெந்தபடியே நாய் அலறி துடித்து ஓடியது.
விசாரணை
இதனை அப்பகுதியைச் சேர்ந்த ரேவதி கண்டு, உடனடியாக அந்த நபரை பிடித்து தாக்கி திருவான்மியூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் என்பதும், பாஸ்ட் ஃபுட்டில் உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும், விலங்குகள் பாதுகாப்பு நல ஆர்வலர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், நாயின் மருத்துவ செலவை முழுவதுமாக பார்த்துக்கொள்வதாக கமல் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கமலிடம் எழுதி வாங்கிக்கொண்டு காவலர்கள் அனுப்பினர். மேலும், அலறி அடித்துக்கொண்டு ஓடிய நாய் பயந்து வேறு இடத்திற்குச் சென்று மறைந்து கொண்டதால் அப்பகுதி மக்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும், ‘நாயினை காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 428 மற்றும் 429 பிரிவுகளின்கீழ் விலங்கினை காயப்படுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்கு செல்ல நேரிடும்’ என விலங்குகள் நல ஆர்வலர் சோமநாதன் தெரிவித்தார்.