தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 45% குறைவு' - The number of deaths in road accidents in 2020 is 45% less than the previous year

சென்னை: 2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 45% குறைவு என சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

chennai traffic police statement
chennai traffic police statement

By

Published : Jan 3, 2021, 5:16 PM IST

2020ஆம் ஆண்டில் நடந்த போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2019ஆம் ஆண்டை விட, 2020ஆம் ஆண்டில் சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் தொடர் முயற்சி, விழிப்புணர்வால் விபத்துகள் குறைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 'சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையினர் கடந்த 2020ஆம் ஆண்டில் போக்குவரத்து விதியினை மீறியவர்கள் மீது 28 லட்சத்து 70 ஆயிரத்து 296 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டில் மட்டும் நடந்த 4 ஆயிரத்து 368 சாலை விபத்துகள், அதற்கு முந்தைய ஆண்டான 2019ஐ காட்டிலும் 36% குறைவாகும். சாலை விபத்துகளில் உயிரிழந்த 846 நபர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை விட 45% குறைவாகும். அதுபோல காயம் அடைந்த 2 ஆயிரத்து 597 நபர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை விட 61% குறைவாகும்.

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோவிட் 19 வைரஸின் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு பொது இடங்களில் முக்கியமாக கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

அவ்வுத்தரவின் அடிப்படையில், சென்னை பெருநகரம் முழுவதும் ஒரு வார காலமாக இரவு நேரங்களில் கடற்கரைக்குச் செல்லும் சாலைகளும் மேம்பாலங்களும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாமல் மூடப்பட்டன. 170 இடங்களில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.

கடந்த டிச.31, 2020ஆம் ஆண்டு இரவு வாகனத் தணிக்கை நடத்தப்பட்ட இடங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு விழிப்புணர்வும், அறிவுரையும் வழங்கப்பட்டது.

மது அருந்திவிட்டு அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுதல் போன்ற தீவிர விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புத்தாண்டு இரவில் சென்ற ஆண்டில் 7 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இவ்வாண்டு(2021) எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் பயனாக ஒரே ஒரு உயிரிழப்பினைத் தவிர, வேறு எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லை.

அரசின் உத்தரவினை நிறைவேற்ற போக்குவரத்துக் காவல் துறை எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பினை நல்கிய, சென்னை பெருநகர மக்களுக்கு பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பாக மனமார்ந்த பாராட்டுகள் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கங்குலிக்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை - மருத்துவர்கள்

ABOUT THE AUTHOR

...view details