தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? - நீதிபதி கேள்வி!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை, தற்போது செயல்பாட்டில் உள்ளதா என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

gandhi
gandhi

By

Published : Aug 3, 2020, 7:42 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இந்நிலையில், தனது மகனுக்கு 90 நாட்கள் பரோல் எனப்படும் சிறை விடுப்பு வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், 'புழல் சிறையில் 50 கைதிகளுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்குக் கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்' எனக் கோரியுள்ளார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ராஜிவ் கொலை வழக்கில் பன்னாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரிக்க ஜெயின் கமிஷன் பரிந்துரை அடிப்படையில், பன்னோக்கு விசாரணை முகமை விசாரணை நடத்தி வருவதாகவும், ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க அதன் அறிக்கைக்காக ஆளுநர் காத்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

பேரறிவாளன்

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சூழலில் அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இது போன்ற சூழலில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து உள்துறைச் செயலாளர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜிவ் கொலை வழக்கு குறித்து விசாரிக்க கடந்த 1999ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி கிருபாகரன், தற்போது அந்த விசாரணை முகமை செயல்பாட்டில் தான் உள்ளதா? என்றும், அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் கேள்வி எழுப்பினார். அப்போது, விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதாக சிறைத்துறை தரப்பில் விளக்கமளிக்கபட்டது.

இதையடுத்து, கடந்த 2017 மற்றம் 2019ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார் - நடவடிக்கை எடுக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details