சென்னை:பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆவணங்களை முறையாக பராமரிக்காதது, பொதுமக்களை காக்க வைத்தல், உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் தகவல் பதிவாளர், உதவியாளர் உள்ளிட்ட ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து அமைச்சர் அதிரடி உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “பத்திரப்பதிவுத்துறை மக்களுக்கு சேவை செய்யும் துறையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவே ஆய்வுக்கு வந்தேன்.
கடந்த எட்டு மாதங்களில் 16 லட்சம் பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது, அதன் மூலமாக அரசுக்கு 8,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த தொகை கடந்த ஆண்டை விட 2,500 கோடி ரூபாய் அதிகம்.
பத்திரப்பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், மோசடியாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கவும் , முறைகேடான ஆவணப்பதிவுகளுக்கு துணை போன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் 1908என்ற சட்டத்திருத்தம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டத்தின் நடைமுறை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளது.