தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தேடுக்கலாம் என்று ஆளுங்கட்சிக்கு தொண்டர்களிடம் இருந்து அதிக 'பிரஷர்' வந்தது. இதையடுத்து ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டம் நடந்து 13 நாட்களே முடிந்த நிலையில் 19ஆம் தேதி அமைச்சரவை கூட்டப்பட்டது.
அப்போது, மறைமுக தேர்தல், உள்ளாட்சி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு, ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதிலும் குறிப்பாக மாநகராட்சி மேயர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டது என்றும் விரைவில் அவசர சட்டம் இயற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்காமல், வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின் மூலம் அதிமுக தனது கூட்டணி கட்சிகளின் வாயடைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை கூட்டணி வைத்தே எதிர்கொள்ள ஆளுங்கட்சி தயாரானது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் 20 சதவீதம் சீட், 3 மேயர் பதவி என்று ஆளுங்கட்சியிடம் துண்டு போட்டு வைத்திருந்தன. கூட்டணி கட்சிகளின் இந்த நச்சரிப்பு ஆளுங்கட்சிக்கு பிடிக்கவில்லை. அவர்களின் வாயடைக்க, மறைமுக தேர்தல் முறையை அரசு கையிலெடுத்துள்ளது.