சென்னை:அரும்பாக்கம் 100 அடி சாலையில் இயங்கி வரும் தனியார் விடுதியில் இருந்து கடந்த (செப்.10) ஆம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் ஒன்று வந்தது. அதில் தங்கள் விடுதியின் அறைகளில் இருந்து அலறல் சத்தம் கேட்பதாகவும், ஏதோ அசாம்பாவிதம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தனியார் விடுதிக்கு சென்ற அரும்பாக்கம் போலீசார், விடுதி ஊழியர்கள் காட்டிய இரு அறைகளை உடைத்து பார்த்த போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று 3 பேரை அடைத்து வைத்து மிரட்டி தாக்கி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் ராஜ் என்பதும், இவர் 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக குருவியாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர் ஹசன் பாஷா என்பவர் கொடுத்த 400 கிராமுக்கு அதிகமான தங்கத்தை துபாயில் இருந்து மைக்ரோ ஓவன் மூலமாக மறைத்து விமானத்தில் கடந்த (செப்.7) ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வந்ததுள்ளார். பின் அங்கிருந்து தங்கத்தை திருடும் நோக்கில், நண்பரான விமல் மற்றும் தனது உறவினர்களுடன் அடையாறு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று மைக்ரோ ஓவனை பிரித்து பார்த்த போது தங்கம் இல்லாததால் அங்கேயே போட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் செப்.8 ஆம் தேதி வீட்டில் இருந்த போது ஒரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று தன்னையும், உறவினர்களான ராம், ஷாம் ஆகியோரை கடத்தி தங்கம் கேட்டு தாக்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அரும்பாக்கத்தில் வைத்து லாட்ஜில் தங்கம் கேட்டு தாக்கி வந்த போது போலீசார் மீட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.