தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழிற்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - ஸ்டாலின் - பிஇ கட்டணம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Sep 20, 2021, 11:46 AM IST

Updated : Sep 20, 2021, 7:59 PM IST

11:43 September 20

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொழிற்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - ஸ்டாலின்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 7.5 விழுக்காடு  சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தொழிற்கல்வி படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 50 மாணவர்களுக்கு வழங்கினார்.

அப்போது பேசிய  முதலமைச்சர், "அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் சேர்வதற்காக 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்யுள்ளது. பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்களது கனவு நிறைவேறும் நாள் இது!

இந்த நாள் ஏற்றம் பிறக்கும் நாள்

உங்கள் கனவு நிறைவேறுவதன் மூலமாக உங்களது பெற்றோரது கனவும், உங்களது குடும்பத்துக் கனவும் நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்திருக்கிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கு இடம் கிடைக்குமா, அதுவும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற ஏக்கம் சில மாதங்களுக்கு முன்பு வரை உங்களுக்கு இருந்திருக்கும்.  

அந்த ஏக்கம் மறைந்து, ஏற்றம் பிறக்கும் நாள்தான் இந்த நாள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்த நாட்டின் நிலையான செல்வம் பொறியியல் பட்டதாரிகளும், மருத்துவ வல்லுநர்களும், கல்வியாளர்களும்தான் என்று அண்ணா குறிப்பிட்டார். அதனால்தான் அண்ணா அதிகமாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.  

கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பேசினார். கல்விச் செல்வம், கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ற வேலை தரப்பட வேண்டும் என்பதுதான். இந்த இயக்கமே அதற்காகத் தான் உருவாக்கப்பட்டது.  

மாணவர்களின் அந்த 3 இலக்குகள்!

ஆட்சியைப் பிடித்தபிறகு அந்த நோக்கத்தை நிறைவேற்றும் காரியங்களையே அதிகம் செய்தும்வருகிறது, நிறைவேற்றியும் வருகிறது தமிழ்நாடு என்பது உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டின் இளைய சக்திகள் அனைத்தும் உயர் கல்வியை அடைந்ததாக மாற்றுவதுதான் இந்த அரசின் உயரிய இலக்கு ஆகும்.

கல்லூரிச் சாலைக்குள் செல்லும் மாணவர்களுக்கு மூன்று முக்கிய இலக்குகள் இருக்க வேண்டும் என்று புரட்சியாளர் லெனின் சொன்னார். படிப்பு, படிப்பு, படிப்பு - ஆகிய மூன்றையும்தான் இலக்காகச் சொன்னார்கள். மூன்று முறை சொன்னதற்குக் காரணம், படிப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்றால் அதற்காக உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு எல்லாம் சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களை இந்தப் பதினேழு வயது வரைக்கும் படிக்கவைக்க உங்கள் பெற்றோர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.  

வேலை கொடுப்பவர்களாக உயருங்கள்

அவர்கள் தங்களது சுகங்களை, சிரமங்களையும் மறந்து, ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களை முன்னேற்றுவதற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள். நம் பிள்ளை பெரிய கல்லூரிக்குள், பெரிய படிப்பு படிக்கப் போகிறான்; பெரிய ஆளாய் வருவான்; பெரிய வேலைக்குப் போவான் என்ற நம்பிக்கையுடன் உங்களை அனுப்பிவைத்துள்ளார்கள்.  

அவர்களது நம்பிக்கையைக் காப்பவர்களாக நீங்கள் உங்களை இன்னும் சிறப்பாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடும், அன்போடும் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களது அன்புச் சகோதரனாக நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  

பள்ளிக் காலத்திலிருந்து கல்லூரிக் காலத்துக்குள் நுழைகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறீர்கள். சிறந்த வேலைவாய்ப்பை நீங்கள் பெற வேண்டும். வேலை தேடுபவர்களாக மட்டுமல்ல, வேலை கொடுப்பவர்களாகவும் உயர வேண்டும்.  

அழியாத செல்வம் கல்விச் செல்வம்

அதற்காக உங்களை முழுமையான திறமைசாலிகளாக, பன்முக ஆற்றல் உள்ளவர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழிற்கல்வி என்பது பட்டம் பெறும் கல்வியாக மட்டும் கருதாதீர்கள். உங்களது தொழில் அறிவை கூர்மையாக்கவும் அதைப் பயன்படுத்த வேண்டும். உங்களில் பலரும் நாளைய நாள் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கலாம்.  

அறிவுடன் சேர்ந்து அறிவின் கூர்மையும் வேண்டும். எதனையும் அறிவியல் பார்வையுடன் அணுகுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இந்தக் கல்விச் செல்வம்தான் என்றும் அழியாத செல்வம் ஆகும். இத்தகைய அழியாத அறிவுச் செல்வமானது அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.  

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் உயர் கல்வி நிலையங்களுக்குள் நுழைய வேண்டும். கிராமப்புற மாணவர்களும் நகர்ப்புறங்களில் இருக்கும் மிகப்பெரிய கல்வி நிலையங்களில் சேர வேண்டும். அதற்காக ஏராளமான திட்டங்களை கழக ஆட்சி அமையும் போதெல்லாம் நிறைவேற்றினோம்.

சமநிலைச் சமுதாயம்

மருத்துவம், பொறியல் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் நுழைய, நுழைவுத்தேர்வு தடையாக இருக்கிறது என்பதை அறிந்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அதனை ரத்துசெய்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இன்று நீட் தேர்வுக்கு எதிராக இந்த அரசும் சட்டப் போராட்டம் நடத்திவருகிறது.  

சமூக நீதி உத்தரவுகளால்தான் சமநிலைச் சமுதாயம் அமைப்பதற்கான அடித்தளம் இடப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69 விழுக்காட்டினர் கிராமப்புற மாணவர்கள்தாம். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறக் கல்வியின் மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது.  அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு...  

  • பொறியியல்,
  • வேளாண்மை,
  • கால்நடை மருத்துவம்,
  • மீன்வளம்,
  • சட்டம்

போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில்,  7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு  செய்ய இந்த அரசால் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த அடிப்படையில்தான் நீங்கள் கல்விச் சாலைகளுக்குள் நுழைகிறீர்கள்.

  • அரசுப் பள்ளிகள்,
  • மாநகராட்சிப் பள்ளிகள்,
  • நகராட்சிப் பள்ளிகள்,
  • ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்,
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள்,
  • கள்ளர் சீர்திருத்தப் பள்ளிகள்,
  • வனத்துறைப் பள்ளிகள்,
  • அரசுத் துறைகளினால் நிர்வகிக்கப்படும் பிற பள்ளிகள்

கல்வியாணை வழங்குவது பெருமை

ஆகிய இடங்களில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர் இந்த இடஒதுக்கீட்டின்கீழ் பயன்பெறுகிறார்கள். நடப்பு கல்வி ஆண்டில், இந்த சிறப்பு உள்ஒதுக்கீடு மூலம் பொறியியல் படிப்புகளில் சுமார் 10 ஆயிரம் அரசுப் பள்ளி மாணாக்கர் பயன்பெறுவர்.  

அதேபோல,  அரசுப் பள்ளிகளில் பயின்ற சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டப் படிப்புகளிலும் பயன்பெறுவார்கள் என்பதையும் நான் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாணவர்கள் மூலமாக, அவர்களது குடும்பமும், அவர்களது ஊரும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.  

இதன் மூலமாக அவர்களது தலைமுறை தலைநிமிர்ந்து நிற்கப் போகிறது. அதன் மூலமாக இந்த மாநிலம் பயனடையப் போகிறது. இப்படிப்பட்ட நிலையில் உங்களுக்கு கல்வி ஆணை வழங்குவதை நான் எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். நாட்டுக்குப் பெருமை ஏற்படுத்தித் தருபவர்களாக நீங்கள் வளருங்கள்! வாழுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காமராசர் ஆட்சிக்காலம் பொற்காலம்

கல்வி ஆணையைக் கொடுத்து ஒரு தலைமுறையை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதன் மூலமாக கிடைக்கும் பெருமை என்பது மிகப்பெரியது. அந்தப் பெருமையைப் பெற்றுள்ள அமைச்சர் பொன்முடியைப் பாராட்டுகிறேன், துறை அலுவலர்களைப் பாராட்டுகிறேன்.

பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும் - உயர்கல்வித் துறையாக இருந்தாலும் - இதன் மூலமாக தமிழ்ச் சமுதாயம் முழுமையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும், உயர் கல்வித் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன்.

காமராசர் காலம் என்பது பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமாகச் சொல்லப்படுகிறது. இன்றும் சொல்கிறோம். திமுக தலைவராக இருந்த கருணாநிதி ஆட்சிக்காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆட்சிக் காலம் உயர் கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

தாயுள்ளம் கொண்ட அரசு

மீண்டும், மீண்டும் மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களின் ஒருவனாக இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சில ஆண்டுகள் கழித்து, எங்கோ ஒரு ஊரில் என்னைச் சந்தித்து, நீங்கள் கொடுத்த அரசாணையால் கல்வி பெற்ற நான், மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன், சொந்தமாக தொழில் செய்கிறேன் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது.

என்னுடைய படிப்பை எப்படி முடிக்கப் போகிறேன் என்கிற கவலையைத் தெரிவித்து, மாணவர் மட்டுமல்ல ஒரு மாணவியும் சொல்கிறார். அவர்களுடைய பெற்றோர் மட்டுமல்ல, அவர்களுடைய கவலைகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய தாயுள்ளம் கொண்ட அரசாக நம்முடைய அரசு இப்போது திகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தக் கோரிக்கையைக் கேட்டுவிட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தேன்.  

அந்த வகையில், இங்கே நான் இப்போது அறிவிப்பு வெளியிடப் போகிறேன். இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தொழிற்படிப்புகளில் கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர் மனம் மகிழக்கூடிய வகையில் ஒரு செய்தியை, ஒரு அறிவிப்பை மகிழ்ச்சியோடு நான் வெளியிட காத்திருக்கிறேன்.  

கட்டணத்தை அரசே ஏற்கும்

அது என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்கு ஆகக்கூடிய செலவு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், ஏன் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது" என நீண்ட உரையாற்றி இறுதியில் மாணவர்கள் மகிழும் செய்தியைச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

இதையும் படிங்க:115 நாடுகளில் இருந்து அயோத்தி ராமர் கோயில் வந்தடைந்த புனித நீர்!

Last Updated : Sep 20, 2021, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details