சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 2554 சிலைகள் வைக்க சென்னை காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட சிலைகளை வருகிற 4ஆம் தேதி கடற்கரைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலைகளைக் கரைக்க ஊர்வலமாக செல்லும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது. குறிப்பாக, மதவாத வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
பட்டாசுகள் விதிக்கத்தடை: காவல் துறை அனுமதி வழங்கிய நாட்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை எடுத்துச்சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், விநாயகர் சிலை கரைக்கப்படும் இடங்கள், ஊர்வலப் பாதைகள் மற்றும் நிறுவப்பட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் நிறுவப்பட்டுள்ள சிலைகளைக் கரைக்க பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய 4 கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளைக்கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக 17 வழித்தடங்கள் அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வழித்தடம், கரைக்கும் பகுதிகள்:சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வியாசர்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரையிலும், அடையார் மற்றும் திருவான்மியூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நீலாங்கரை கடற்கரையிலும், தங்கசாலை, வண்ணாரப்பேட்டையினை சுற்றியுள்ள பகுதிவாசிகள் காசிமேடு துறைமுகத்திலும் சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலைகளைக்கொண்டு செல்லும்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் 21,800 காவல்துறையினர் மற்றும் 2,650 ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
எச்சரித்த காவல் துறை:மேலும், சிலைகள் வைக்கப்பட்ட இடங்களைச்சுற்றி போலீசார் தொடர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சிலைகள் கரைக்கும் இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் வைக்கப்படும் எனவும், கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலத்தின்போது காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: 'இந்து சமய விழாக்களுக்கு வாழ்த்துவது இந்து சமய அறநிலையத்துறையின் பணியல்ல...!' - செந்தில் குமார் எம்.பி.