சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் 126 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் மூலம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விட வலுவான தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கரோனா ஒரு உலகத்தொற்று. இதில் இருந்து முழுமையாக வெளியில் வந்து விட்டோம் என்று சொல்லமுடியாது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 1 லட்சம் என்ற கணக்கில் தினமும் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் மட்டும் பாதிப்பானது சற்று அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் 500 நபர்களுக்குக்கீழ் தான் கரோனா பாதிப்பு உள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.