சென்னை: அண்ணா தொழிற்சங்கத்தின் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், சென்னை வேளச்சேரியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் இன்று (ஆக. 16) நடைபெற்றது.
தொழிற்சங்கத்தின் தெற்கு மண்டலச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும், 17 பணிமனைகளின் கிளை நிர்வாகிகள் பொறுப்புகளுக்கும், ரூ. 500-லிருந்து ரூ. 5,000 வரையிலான கட்டணத்தைச் செலுத்தி வேட்பு மனுவை உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர். ஆகஸ்ட் 22ஆம் தேதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
அரசு மறைக்க முயல்கிறது
இந்நிலையில், வேட்புமனு தாக்கலை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "எப்போதும் சமுதாயத் தலைவர்களை மதிக்கும் இயக்கம் அதிமுக தான். சுதந்திரத்திற்காக பல இன்னல்களை அனுபவித்தவர், மாவீரன் அழகு முத்துக்கோன்.
அவருக்கு அதிமுக சார்பில் எழும்பூரில் கம்பீரச் சிலை வடிவமைக்கப்பட்டது. அப்போது கண்ணப்பனும் அமைச்சராக இருந்தார். அழகு முத்துக்கோன் வீரத்தை திமுக அரசு மறைக்க முயல்கிறது.
நேற்று (ஆக. 15) வெளியிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில், அழகு முத்துக்கோன் பெயர் இடம்பெறாதது, யாதவர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது.
'திமுகவினர் இல்லத்தரசிகளுக்கு நாமம்தான் போடுவார்கள்'
இதையறிந்து திமுக அமைச்சரவையில் உள்ள யாதவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் ஆகியோர் கோபத்தில் ராஜினாமா செய்வார்களா..? அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் நிதிநிலை சீரமைந்த பிறகு தரப்படும் என்று முதலமைச்சர் கூறுவது, போகாத ஊருக்கு வழிதேடும் கருத்து.
மத்திய அரசு ஏற்றிக்கொடுத்த அகவிலைப்படியை மாநில அரசு ஏற்றித் தரவில்லை. அதிமுகவினர் உள்ளத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று பேச மாட்டோம். திமுகவினர் இல்லத்தரசி, அரசு ஊழியர்களுக்கு நாமம்தான் போடுவார்கள்.
'மலைக் கள்ளன்' படத்தில் எம்ஜிஆர் பாடிய 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..' என்ற பாடல் திமுகவிற்குப் பொருந்தும். ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் நிதியை அதிகரிப்பது இயல்பானதுதான்.
அதிமுக நிலைப்பாடு
வேளாண் தனி நிதி அறிக்கை வரவேற்கக் கூடியதுதான். ஆனால், கூட்டுப்பண்ணை போன்றவற்றை ஏற்கெனவே நாங்கள் அறிவித்துவிட்டோம்.