கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள திருநெல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் டி.என். சேஷன். இவர், 1932 டிசம்பர் 15ஆம் தேதி டி.எஸ். நாராயண ஐயர்-சீதாலட்சுமி தம்பதிக்கு புதல்வனாகப் பிறந்தார்.
பள்ளிப் படிப்பை பாலக்காட்டில் முடித்த சேஷன், முதுகலை படிப்பை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் முடித்தார். 1955ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சிப் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கலையில் முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.) முடித்தார்.
ராணுவ செயலர், அமைச்சரவை செயலர்... படிப்படியாக உயர்ந்த சேஷன்
தமிழ்நாட்டின் கோயமுத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சார் ஆட்சியராகவும் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார். 1988ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது சேஷன், ராணுவ செயலர் பொறுப்பை வகித்தார். அதன்பின்னர் அமைச்சரவைச் செயலராக பதவி உயர்வைப் பெற்றார். தொடர்ந்து திட்ட ஆணையத்திலும் பணி செய்தார். அதன் பின்னர், அனைத்து மாநில தேர்தல்களில் நுண் பார்வையாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக அதிரடி ஆக்ஷன்!
இதையடுத்து 1990ஆம் ஆண்டு இந்தியாவின் 10ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியில் அவர் ஆறு ஆண்டு காலம் இருந்தார். அப்போது அவா் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்பட்டன. இந்தியத் தோ்தல் வரலாற்றில் முதல்முறையாக வாக்காளர் அட்டையை அறிமுகம் செய்தவர் இவர்தான். இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் தோ்தல் தில்லுமுல்லுகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டன.
தேர்தல் ஆணையம் மீது சாதாரண மக்களுக்கும் நம்பிக்கை பிறந்தது. இவர் கொண்டுவந்த கடுமையான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் எதிர்த்தனர். எந்த மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் அடிபணியாமல் சேஷன் தனது பணியைத் தொடர்ந்தார். இந்தப் பணிகள் ஒரு கட்டத்தில் நின்றுவிடக் கூடாது என நினைத்த அவர், தேர்தல் விதிமுறைகள் தொடர வேண்டும், இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விதிமுறையை கட்டாயமாக்கினார்.
திருமங்கலம் பார்முலா என்று கூறுவார்களே, அந்த இடத்தில் வரவேண்டிய கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்திக் காட்டிய பெருமையும் இவரையே சாரும்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியுடன், டி.என். சேஷன்! டி.என். சேஷனுக்கு ரமோன் மகசேசே விருது! ராணுவத்தைக் கொண்டுவந்தாவது தேர்தல் விதிமுறைகளைக் காக்க வேண்டும் என்று முழங்கியவரும் இவர்தான். தனது ஓய்வுக்குப் பின்னர் சேஷன் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். அவரின் சேவை, நேர்மையைப் பாராட்டி 1996ஆம் ஆண்டு டி.என். சேஷனுக்கு ரமோன் மகசேசே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.1997ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அந்தத் தேர்தலில் கே.ஆர். நாராயணன் வெற்றிபெற்றார்.
இயற்கை எய்திய சேஷன்
முதுமையாலும், உடல் நலக் குறைவாலும் பாதிக்கப்பட்டிருந்த டி.என். சேஷன், சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த ஆண்டு காலமானார்.
தேர்தல் களத்தின் நம்பிக்கை நாயகனாக இன்றும் அவரே...!
மத்தியப் பிரதேசத்தில் போலி வாக்காளர்கள் அதிகரித்துவிட்டதாக மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு தாக்கலானது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டி.என். சேஷனை நினைவுகூர்ந்து அவர் தலைமையில் தேர்தல் ஆணையம் எவ்வாறு மக்களிடம் நம்பிக்கை பெற்றதோ, அவ்வாறு தேர்தல் அலுவலர்கள் நம்பிக்கை பெற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
இது இந்திய ஜனநாயகத் திருவிழாவின் சக்கரவர்த்தி டி.என். சேஷனின் உச்சபட்ச நேர்மைக்கு கிடைத்த பாராட்டு என்றால் அது மிகையாகாது!
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்துக்கு வடிவம் கொடுத்த டி.என். சேஷன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்