சென்னை: பெசன்ட் நகரின் ஓடைக்குப்பம் பகுதியில் 179ஆவது வார்டில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசனும், திமுக சார்பில் கயல்விழியும் போட்டியிடுகின்றனர்.
காலை முதல் 179ஆவது வார்டில் சுமுகமாக வாக்குப்பதிவு நடந்துவந்த நிலையில், மாலை திடீரென திமுகவினர் சிலர் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்கு இயந்திரத்தை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அதிகமான வாக்குகள் அதிமுகவிற்கு செலுத்தப்பட்டிப்பதால் தோல்வி பயத்தில், திமுகவைச் சேர்ந்த திருவான்மியூர் கதிர் அடியாட்களுடன் வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் உடைந்த வாக்கு இயந்திரத்தை மாற்றி, புதிதாக இயந்திரம் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து திருவான்மியூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பழனியில் போலீசாருடன் வாக்குவாதம் - வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு