சென்னை: அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலில் களவாட வந்த நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒப்பந்த நியமனக் காவலர், அருள்மிகு நாகப்பச் செட்டி பிள்ளையார் திருக்கோயில் கட்டுமான விபத்தில் உயிரிழந்த பக்தர் ஆகியோரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கினார்.
சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று திருக்கோயில் உண்டியலை களவாடவந்த நபர்களால் கோயில் ஒப்பந்த நியமனக் காவலர் த.பாபு என்பவர் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி ஜூன் 20ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அக்காவலரை தாக்கிய நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, தம்புசெட்டி தெரு, அருள்மிகு நாகப்பச் செட்டி பிள்ளையார் திருக்கோயிலில் கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று பூட்டியிருந்த கோயிலின் முகப்பில் நின்று சுவாமி தரிசனம் செய்த திவாகர் என்பவர் கோயில் திருப்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் (கொடுங்கை) எதிர்பாராதவிதமாக அவர்மீது விழுந்து உயிரிழந்தார்.