சென்னை: கடந்த 150 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள், மருத்துவமனை நோயாளிகளுக்கு சென்று பைபிளை வழங்கி பயிற்சி வழங்கி வருகின்றது ஸ்கிரிப்ஷர் யூனியன் டிரஸ்ட்.
இதில் கடந்த 17 ஆண்டுகளாக செயலாளராக இருந்து வருபவர் கீழ்பாக்கத்தில் வசித்து வரும் சாம் ஜெய்சுந்தர். இந்நிலையில், ஜோயல் கிப்ட்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சாம் ஜெய் சுந்தர் பயிற்சி வழங்குவதற்காக செல்லும் பள்ளிகளில் பல மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், ஆபாசமாக மாணவிகளிடம் உரையாடியதாகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் சாம் ஜெய் சுந்தர் ஆபாசமாக உரையாடிய பதிவையும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக 15 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகளுக்கு ஆபாசம் குறித்து தெரிய வாய்ப்பில்லை என நினைத்து ஆபாசமாக பேசி வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் சாம் ஜெய் சுந்தர் மட்டுமில்லாமல் அதே யூனியனில் மத போதகராக இருந்து வரும் ரூபன் கிளமெண்ட் மற்றும் ஆல்பர்ட் என்பவர் மீதும் பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மீடு (#METoo) மூலம் பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களை வெளி கொண்டு வந்த பாடகி சின்மயியும் பாதிக்கப்பட்ட மாணவிகள் வெளியிட்ட பதிவை ஆதரவாக தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளிடம் ஆபாசமாக உரையாடிய மத போதகர்! சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் ஸ்கிரிப்ஷர் யூனியன் கமிட்டி உடனடியாக கூடி குற்றம்சாட்டப்பட்ட சாம் ஜெய்சுந்தரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் ஆல்பர்ட் மற்றும் ரூபன், ஜானெட் எபினேசர் ஆகியோரிடம் கமிட்டி விசாரணை நடத்தி வருவதாகவும் நிர்வாகம் தரப்பில் கடிதம் வெளியாகி உள்ளது.