சென்னை: கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் மதகுகளைத் திறந்துவிட்டனர். இது பெரும் சர்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, 'முல்லைப் பெரியாறு அணையில் எந்தெந்த தேதியில் எவ்வளவு நீர் தேக்கி வைக்க வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் 29ஆம் தேதி தமிழ்நாடு நீர்வள அலுவலர்களால் மதகுகள் திறக்கப்பட்டது.
நீர் திறப்பது குறித்து கேரள அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்தோம். எதிர்பாராத விதமாக கேரள அமைச்சர்கள் அன்று அந்தப் பகுதிக்கு வந்ததனர்.
நீதிமன்ற ஆணைப்படி அக்டோபர் 29ஆம் தேதி 138 அடி நீர் இருக்க வேண்டும். ஆனால், அன்று 138.75 அடி நீர் இருந்ததாகவும் நீதிமன்ற உத்தரவுக்கு அதிகமாக இருந்த 0.75 அடி நீர் 29ஆம் தேதி திறந்துவிடப்பட்டது.
சட்டப்படிதான் மதகுகள் திறக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சமீபத்தில் போடப்பட்டது என்பதால், இதுகுறித்து பழமைவாதிகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்துவருகின்றனர்' எனக்கூறினார்.
அரசியல் கட்சிகள் மீது துரைமுருகன் குற்றசாட்டு
'இதேபோல் பேபி அணைப் பகுதியில் 15 மரங்கள் வெட்ட கேரள அலுவலர்கள் அனுமதி வழங்கி, அனுமதி வழங்கப்பட்ட 15 மரங்கள், என்ன வகையான மரங்கள், மரங்கள் இருக்கும் இடம் குறித்தும் கேரள அரசு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுமதி கடிதம் கிடைத்த நிலையில்தான் முதலமைச்சர் கேரளாவிற்கு நன்றி தெரிவித்தார். தற்போது கேரள அமைச்சர்கள் அலுவலர்கள் தங்களுக்குத் தெரியாமல் அனுமதி வழங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
அமைச்சர்களுக்கு தெரியாமல் அலுவலர்கள் எப்படி அனுமதி வழங்க முடியும்?
நல்லெண்ணத்தில் தான் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது. இதைப் புரிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை உரிமைகளை காக்க கடந்த காலங்களிலும் திமுக தான் போராடியிருக்கிறது. பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதாகக்கூறி 136 அடிக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பைக் குறைக்க வேண்டும் என கேரள கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அணை திடமாக உள்ளது என தமிழ்நாடு நீதிமன்றத்தை நாடியிருப்பதாக' துரைமுருகன் கூறினார்.
ஓபிஎஸ்ஸை சீண்டிய துரைமுருகன்
மேலும் 14 முறை முல்லைப்பெரியாறு அணை சென்றதாகக் கூறும் ஓபிஎஸ்ஸுக்கு சென்று வந்த தேதி, அவருக்குத் தெரியாமல் போகலாம். ஆனால், பொதுப்பணித்துறையின் குறிப்பேடுகளில் தேதி பதிவாகியிருக்கும். அணை திறக்க சென்றதாக ஓபிஎஸ் காட்டும் புகைப்படம் அணை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் இருக்கிறது.
நாள் முழுவதும் வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். கருணாநிதி குறிப்பிட்டதைப் போல உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் ஸ்டாலின். இப்படிபட்ட முதலமைச்சரை உழைக்கவில்லை என அரசியல் செய்கிறார்கள்; போகும் இடமெல்லாம் மக்கள் முதலமைச்சரை கையெடுத்து கும்பிடுகிறார்கள்’ என துரைமுருகன் கூறினார்.
இதையும் படிங்க:அதிமுக அமைச்சர் முல்லை பெரியாறு அணையை பார்த்தாரா? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி